×

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி டி.குண்ணத்தூர் அருகில் உள்ள முத்தப்பன்பட்டியில் பிறந்தார் முத்தையா. சேடபட்டி சட்டசபைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றதால் சேடபட்டியார் என்று அழைக்கப்பட்டார் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சேடபட்டி முத்தையா சேடபட்டி செல்லப்பிள்ளை என்று தொகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக பதவி வகித்தார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடப்பட்டி முத்தையா, அதிமுகபொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாகவும் இருந்துள்ளார். சேடப்பட்டி முத்தையாவின் இல்லத் திருமண விழாவில் ஜெயலலிதா பேசிய போது, விசுவாசத்திற்கு மறுபெயர் சேடப்பட்டி முத்தையா என்று பாராட்டியுள்ளார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் எம்.பியாகவும் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தார். காலப்போக்கில் இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து விலகி கடந்த 2006-ம் ஆண்டு திமுக-வில் இணைந்தார். மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்த சேடபட்டி முத்தையாவிற்கு கடந்த சில வாரங்களாகவே உடல் குறைவு ஏற்பட்டது.

உடல் நலக்குறைவு உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சேடபட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags : Speaker ,Sedaparthi Muthaiah , Former Sabha leader Sedapatti Muthiah passes away: Political party leaders mourn
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் விலகியது...